×

பிரித்தாளும் பா.ஜ

இந்தியாவை துண்டாட பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தியது அன்றைய பிரிட்டிஷ் அரசு. இன்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க, அதே பிரித்தாளும் ெகாள்கையை பின்பற்றுகிறது மோடி தலைமையிலான பா.ஜ அரசு. சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி மாநில ஆட்சிகளை பிடிப்பது, கட்சிகளை பிரிப்பது உள்ளிட்ட வேலைகள் அதிவேகமாக நடந்து வருகிறது. காரணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல். நாடு முழுவதும் வலிமை மிக்க 26 எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

ஒன்றாக தேர்தலை சந்திப்பது அவர்களது நோக்கம். அப்படி ஒரு காரியம் நடந்து விட்டால் 2024 மக்களவை தேர்தல் பா.ஜவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும். அந்த பயம் பா.ஜவுக்கு இப்போதே வந்து விட்டது. பா.ஜவும், காங்கிரசும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் தொகுதிகள் தவிர மாநில கட்சிகள் பலம் மிக்க மாநிலங்களில் பா.ஜவின் வெற்றி வாய்ப்பு இப்போது குறைந்து விட்டது. பீகார், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் தென்மாநிலங்களில் பா.ஜ செல்லாக்காசாகி விடும். அப்படி நடக்கும் பட்சத்தில் தொடர்ந்து 3வது முறையாக பா.ஜ ஆட்சி, மீண்டும் ஒரு முறை மோடி என்ற பா.ஜவின் கோஷம் மங்கிப்போய் விடும்.

அதனால் தான் இப்போது நாடு முழுவதும் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளையும் குறிவைத்து வேட்டையாடும் பணியை அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் பா.ஜ மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, ஆந்திரா உள்ளடக்கிய தென்மாநிலங்களில் மட்டும் 130 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறை கர்நாடகாவில் 25, தெலங்கானாவில் 4 தொகுதிகள் மட்டுமே பா.ஜ கணக்கில் சேர்ந்தது. மற்ற தொகுதிகள் எதிர்க்கட்சிகள் வசம். இப்போது கர்நாடகாவிலும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜவுக்கு தோல்வி.

அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தல் அங்கு சாதகம் இல்லை. அதே போல் பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜவுக்கு மட்டும் 17 இடங்களும், மகாராஷ்டிராவில் 48 இடங்களில் 23 இடங்களும் மேற்குவங்கத்தில் 42 இடங்களில் 18 இடங்களும் பா.ஜவுக்கு கிடைத்தன. இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க முடிவு எடுத்து இருப்பதால் இந்த இடங்களும் பா.ஜவிடம் இருந்து பறிபோவது நிச்சயம். அந்த பீதியில் தான் பா.ஜ, பீகாரில் மகாபந்தன் கூட்டணியை உடைத்தது, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பிளந்தது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருக்குலைத்தது.

இப்போது தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மூலம் திமுக தலைமையிலான ஆளும்கூட்டணிக்கு பயம் காட்டிவிடலாம் என்று கணக்கு போட்டு களம் இறங்கியிருக்கிறது பா.ஜ. ஜூன் 13ம் தேதி நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை பழைய வழக்கு ஒன்றை கணக்கு காட்டி கைது செய்தார்கள். இப்போது 11 ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கை கைவசம் வைத்துக்கொண்டு மூத்த அமைச்சர் பொன்முடியை மிரட்டி விடலாம் என்று நினைத்து காய் நகர்த்துகிறார்கள். இவை எல்லாம் அடுத்த ஆண்டு தேர்தலுக்காக பா.ஜ பயன்படுத்தும் யுக்திகள். அப்படி அவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் தென்மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் காலூன்றி விடலாம் என்பது பா.ஜ போடும் கணக்கு. ஆனால் மக்களின் மனக்கணக்கு அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜவுக்கு தெளிவாக தெரிய வரும்.

The post பிரித்தாளும் பா.ஜ appeared first on Dinakaran.

Tags : B.J. ,British government ,India ,BJP ,
× RELATED காங்கிரஸ் வேண்டுகோளை ஏற்று இந்தூரில் நோட்டாவுக்கு ஓட்டா? பதறும் பா.ஜ